மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்து, உதவி உபகரணங்கள் திட்டத்தின் பொன்விழா ஆண்டான 2024-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி, சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகள் வழங்கி, சென்னை, கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மைய சேவைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் உள்ள 35 ஆரம்ப நிலை இடையீட்டு மையங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் வலுப்படுத்தி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களாகவும் அறிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை இரண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தியது, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்குவது, அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75% பயண கட்டண சலுகை வழங்குவது என, மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் பொன்விழா ஆண்டு
மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் திட்டத்தின் பொன் விழா ஆண்டையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சுமார் 26,000 நபர்களுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன் அடையாளமாக இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 211 கோடி ரூபாய் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

“விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியின் சேவையை தொடங்கி வைத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்கிடும் வகையில், “தமிழ்நாடு உரிமைகள்” திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centres) அமையப் பெறவுள்ளன. இம்மையங்களுக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” என்ற முதல் மறுவாழ்வு சேவை ஊர்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் மறுவாழ்வு சேவை ஊர்தி, அணுகல் தன்மையுடனும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வூர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும். அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகள் இவ்வூர்திகளில் வழங்கப்படும்.

சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகள் வழங்குதல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகளை 16 நபர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் சேவையை தொடங்கி வைத்தல்
தமிழ்நாட்டில் “எல்லோருக்கும் எல்லாம்“ என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கி மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த புதிய முன்னெடுப்பாக சென்னை, கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் சேவைகளை (Centre for Excellence for the Persons with Autism Spectrum Disorder) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். புற உலக சிந்தனையற்ற நபர்களுக்கான சிகிச்சை தேவை குறித்த எவ்விதமான வழிகாட்டுதலும் இல்லாத அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக, ஒரே குடையின் கீழ் அனைத்து வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் கிடைக்கப்பெறும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில், புறவுலக சிந்தனையற்றோரை கண்டறிதல், மதிப்பீடு செய்தல், அவர்களுக்கான சிறப்புக் கல்வி வழங்குதல், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்குதல், இயன்முறை/செயல்முறை சேவைகள், பகல்நேர பராமரிப்பு சேவைகள், தொழில் சார்ந்த பயிற்சி அளித்தல் மற்றும் உளவியல் போன்ற சேவைகளை அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பல்துறை வல்லுநர்கள் மூலமாக வழங்கப்படும். இவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம் இத்தன்மை உடையவர்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் செயல்பாட்டுத் திறனில் வளர்ச்சி பெற இந்த ஒப்புயர்வு மையம் வழிவகை செய்கிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்படும் ஆரம்பநிலை இடையீட்டு மையங்களை வலுப்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையங்களாகவும் அறிவித்தல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் 35 ஆரம்ப நிலை இடையீட்டு மையங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் வலுப்படுத்தி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஆர். சுதன், இ.ஆ.ப., (ஓய்வு), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம். லக்ஷ்மி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: