கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் கைது

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு உயர்ரக கஞ்சா மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முகப்பேர் மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள், ஆயில் சப்ளை செய்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களின் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர்களின் விவரத்தை தனிப்படை போலீசார் சேகரித்தனர். இதில் பிரபல நடிகர் மன்சூர்அலிகானின் மகனும் உதவி இயக்குனருமான அலிகான் துக்ளக்(26) என்பவரின் செல்போன் நம்பர் பதிவாகியிருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்றுமுன்தினம் காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் கொண்டு வந்து விடியவிடிய விசாரணை நடத்தினர். இதன்பின்னர் அலிகான் துக்ளக் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மேலும் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒ.ஜி உயர்ரக ஒரிஜினல் கஞ்சா வாங்கி சப்ளை செய்துள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மற்றும் சாகி(22), மொஹம்மது ரியாஸ் அலி(26), பைசல் அஹமது(26), சந்தோஷ், குமரன், யுகேஷ் உட்பட 7 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்து ஒ.ஜி ஒரிஜினல் 4 கிராம் கஞ்சா, போதைப் பொருள் மற்றும் 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை வழக்கு சம்பந்தமாக பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமின், மேஜிக் மக்கூர்ன் உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் துணை இயக்குனராக அலிகான் துக்ளக் இருப்பதால் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுசம்பந்தமாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அலிகான் உட்பட 7 பேரையும் நேற்று அம்பத்தூர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் தனது மகனை பார்க்க அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

The post கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: