லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: மீண்டும் லண்டன் திரும்பியது

சென்னை: லண்டன் விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மதியம் 328 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. நடுவானில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.விமானத்தை தரையிறக்க பைலட் முடிவு செய்தார். லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம், லண்டன் விமான நிலையத்திற்கே திரும்பியது. 8 மணி நேரத்திற்கு பின்பு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று முன்தினம் இரவு விமானம் லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

இந்த விமானம் வழக்கமாக சென்னைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். ஆனால் நேற்று சுமார் 8 மணி நேரம் தாமதமாக பகல் ஒரு மணியளவில் சென்னைக்கு வந்தது. இதற்கிடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் லண்டனுக்கு காலை 7.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று அந்த விமானம் தாமதமாக சென்னைக்கு வந்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு சுமார் 8 மணி நேரம் தாமதமாக மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த 320 பயணிகளுக்கும் விமானம் தாமதம் என்ற தகவல், குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த வெளியூர் பயணிகள் பலர் ஏற்கனவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். லண்டன் விமானம், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 மணி நேரம் தாமதம் ஆனதால், சென்னையில் இருந்து புறப்படும் பயணிகள் 320 பேரும், லண்டனிலிருந்து வந்த பயணிகள் 328 பேரும் அவதி அடைந்தனர்.

The post லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: மீண்டும் லண்டன் திரும்பியது appeared first on Dinakaran.

Related Stories: