* அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை: பெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும், கண்காணிப்பு அலுவலர்களையும் துரிதமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வழங்கவும் அமைச்சர்கள் தலைமையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைத்து உத்தரவிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பெருவெள்ள பாதிப்புகளை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா, விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் பழனி ஆகியோர் நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர் ராமன், மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சி தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
The post புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.