கடந்த 2 ஆண்டுகளாக, துணைவேந்தர் பொறுப்பை, `துணைவேந்தர் கன்வீனர் குழு’ கவனித்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறை செயலாளர் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். பல்கலைக்கழக நியமன பேராசிரியராக லவ்லினா லிட்டில் பிளவர், ஆளுநரின் நியமன பேராசிரியராக கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் வாசுகி, தமிழ்நாடு அரசின் நியமன பேராசிரியராக தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்க தலைவர் அஜித்குமார் லால்மோகன் என 3 பேர் உள்ளனர். துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் இருக்கும் நிலையில், ஆளுநர்தான் தாமதம் செய்கிறார்.
துணை வேந்தர் பணியிடம் மட்டுமின்றி, 2016 ஏப்ரல் 1ல் இருந்து 8 ஆண்டுகளாக, பதிவாளர் பணியிடமும் காலியாக இருக்கிறது. இதுதவிர, பல்கலைகழகத்தில் உள்ள 12 விடுதிகளிலும் காப்பாளர் பணியிடம் மற்றும் 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தேசிய தர வரிசை மையத்தின் 2024ம் ஆண்டு பட்டியலில், இந்தியாவிலுள்ள 100 முதன்மை கல்வி நிறுவனங்களில், பாரதியார் பல்கலைக்கழகம் 44வது இடத்தில் உள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவும், இந்த பல்கலைக்கழகத்துக்கு A++ என்ற அங்கீகாரத்தை அளித்துள்ளது.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து புள்ளிகள் 0.56 சரிந்துள்ளன என்று பல்கலைக்கழக இணையதளம் உறுதிசெய்கிறது. இதற்கு காரணம், கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததுதான் என்கிறார்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள். துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாததால், கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் குறித்து குழப்பம் ஏற்பட்டு, மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், முடிவுகளை சீக்கிரம் எடுக்கவேண்டும் எனவும் இப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
* விஜிலென்ஸ் பிடியில் 4 பேர்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை 4 துணைவேந்தர்கள், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளனர். அதிலும் ஒரு துணைவேந்தர் நேரடியாக லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிகப்பெருமை வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் மாண்பு, சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
The post நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருக்கும் நிலையில் `தலை’ இல்லாமல் 2 ஆண்டாக செயல்படும் பாரதியார் பல்கலை: பதிவாளர் பணியிடமும் 8 வருடங்களாக காலி கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் appeared first on Dinakaran.