செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

சென்னை: சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்யும் விதத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் பிரோபா 3 செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ராக்கெட் ஏவுதலுக்கான செயற்கைகோளை ராக்கெட்டில் பொருத்துவது, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதலுக்காக இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரம் கவுன்டவுன் முடிந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 4.12 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: செயற்கைக்கோளின் கடைசிநேர சோதனையின் போது செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஏவுதலை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி உள்ளிட்ட சில உபகரணங்கள் கடைசி நேரத்தில் தான் ஆன் செய்யப்படும் அப்போது ஏதாவது தொடர்புகள் துண்டிப்பு மற்றும் தொடர்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

என்ன பிரச்னை என்பது ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு தான் தெரியும். செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதால் அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். பெரிய அளவில் பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டிருந்தால் ராக்கெட் ஏவுதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கும் நாளை(இன்று) மீண்டும் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சிறிய பிரச்னையாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: