ஒவ்வொரு ரயில் டிக்கெட்டுக்கும் 46% தள்ளுபடி வழங்கப்படுகிறது: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில் பயணம் அனைவரும் வசதியாக பயணிக்க ஏற்ற வகையில் உள்ளன. பேருந்து கட்டணங்களை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் மிக குறைவாக உள்ளன. நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று பதிலளித்தார். அப்போது பேசிய அவர்; ஒரு ரயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால், பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிப்பதாகவும், 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது என்று அவர் கூறினார். மேலும், விரைவு ரயில் சேவை குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அதன் சிறப்பான சேவை பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

The post ஒவ்வொரு ரயில் டிக்கெட்டுக்கும் 46% தள்ளுபடி வழங்கப்படுகிறது: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: