2024-25ல் பேரிடர்களில் 2,803 பேர் பலி
2024-25ம் ஆண்டில் இயற்கை பேரழிவுகளில் 2,803 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3.47 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் 373 பேரும், இமாச்சலப்பிரதேசத்தில் 358 பேரும், குஜராத்தில் 230 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,’ 58,835 கால்நடைகள் உயிர் இழந்தன. 10.23 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ.10,728 கோடியும், இரண்டாம் தவணையாக ரூ.4,150 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, ரூ. 4,043 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 3 பெண் எஸ்ஐ 10 பெண் போலீஸ்
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில்,’ கடந்த 10 ஆண்டுகளில் 9.48 லட்சம் ஒன்றிய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்களில் பெண்களின் எண்ணிக்கை 15,499ல் இருந்து 42,910 ஆக உயர்ந்துள்ளது. 2025ம் ஆண்டில் புதிதாக 4,138 பெண்கள் இந்த படைகளில் சேர்க்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் காவலர்களில் 33 சதவீதம் பெண் காவலர்களை பணியமர்த்துவது மாநில அரசுகளின் பொறுப்பு. அதற்கு வசதியாக காலியாக உள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை மாற்றி, கூடுதல் பெண் கான்ஸ்டபிள் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உருவாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தது மூன்று பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்’ என்றார்.
1,700 ஸ்கைப் ஐடி, 59,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் மக்களவையில் கூறுகையில்,’ டிஜிட்டல் கைது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் ஐடிகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது. 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகள், 1.32 லட்சம் ஐஎம்இஐகள் முடக்கப்பட்டுள்ளன’ என்றார்.
2,988 மருந்துகள் தரமற்றவை 282 மருந்துகளில் கலப்படம்
நாடு முழுவதும் 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 2,988 மருந்து மாதிரிகள் தரமானதாக இல்லை. 282 மருந்துகளில் போலி அல்லது கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தார்.
எண்ணெய் வயல் திருத்த மசோதா நிறைவேற்றம்
எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் முதலீட்டை அதிகரிக்க சுரங்கங்கள் செயல்பாடுகளில் இருந்து பெட்ரோலிய பணிகளை விலக்க வகை செய்யும் எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.