கனமழையால் தரைப்பாலம் துண்டிப்பு; வத்தல்மலை அடிவாரத்தில் துணை முதல்வர் நேரில் ஆய்வு: தற்காலிக பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார்

தர்மபுரி: தர்மபுரி வத்தல்மலையில் விடிய விடிய பெய்த கனமழையால், பூமரத்தூர் அட்டப்பள்ளம் தரைப்பாலம், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வத்தல்மலை சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் சிலர் ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் நடந்து சென்றனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே, மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம், சேலம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கார் மூலம் வத்தல்மலை அடிவாரத்திற்கு நேற்று மாலை 5.15 மணியளவில் வந்தார். சாலை துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை பார்வையிட்டார். தற்காலிக பால பணியை ஆய்வு செய்தார். பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டருடன் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அரூர் புறப்பட்ட துணை முதல்வர், வழியில் திரண்டிருந்த பொதுமக்களை கண்டதும், காரில் இருந்து இறங்கி அவர்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர், கொமத்தம்பட்டி-வேப்பமரத்தூர் பிரிவு சாலையில், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, வேப்பமரத்தூர் கிராம மக்கள் பெரிய ஆற்றுப்பாலத்தை கடக்க மேம்பாலம் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை கேட்ட துணை முதல்வர், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வேப்பமரத்தூர் கிராமத்திற்கு நேரில் சென்று, அந்த ஆற்றை ஆய்வு செய்தார். பின்னர், கொமத்தாம்பட்டி – தர்மபுரி சாலையில் எட்டியானூர் வளைவில், கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றார். முன்னதாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ராமன் நகர் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து எட்டிமரத்துப்பட்டி கிராமத்தில் நிரம்பிய ஏரியை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அவர்களிடம், அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.

The post கனமழையால் தரைப்பாலம் துண்டிப்பு; வத்தல்மலை அடிவாரத்தில் துணை முதல்வர் நேரில் ஆய்வு: தற்காலிக பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார் appeared first on Dinakaran.

Related Stories: