வெளி மாநில மக்களால் நிரம்பும் திருவண்ணாமலை நகரம்: மாத வாடகை வீடுகளை நாள் வாடகைக்கு விட்டு வசூல்

திருவண்ணாமலை: கோவில் நகரமான திருவண்ணாமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் குடியிருப்புகள் தங்கும் விடுதிகளாக மாறி வருகின்றன. இதனால் உள்ளூர் வாசிகளுக்கும் வாடகைக்கு வீடு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு நாள் தோறும் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் குறிப்பாக கார்த்திகை தீபத்திருநாளன்று லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால் திருவண்ணாமலை நகரே திக்குமுக்காடும்.

இப்படிப்பட்ட ஆன்மீக நகருக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் வழிபாட்டு மன்றங்கள் அமைத்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் சாலை, பெரும்பாக்கம் சாலை, ரமணாஷ்ரமம் எதிர்புறம், வஊசி நகர், வேங்கைக்கால், பாலாஜி நகர் போன்ற இடங்களில் இவர்கள் தங்குவதால் வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதுவும் மாத வாடகை என்பதற்கு பதில் தினசரி வாடகை என்ற பெயரில் வாடகை வசூலிக்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. திருவண்ணாமலை மக்களின் புதிய பழக்கத்தால் இந்நகரை கொண்டு விவசாய பணிகள் உள்ளிட்ட கூலி வேலை செய்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லவன் பாளையம், சமுத்திரம், ஏந்தல் போன்ற கிராமங்களில் வசிக்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களில் தேவை அதிகரித்துள்ளதால் ரூ.2000 முதல் ரூ.3000 ஆக இருந்த வாடகை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை உயர்ந்திருப்பது அவர்களை கவலை அடைய செய்துள்ளது. தங்கும் விடுதி ரெசிடண்ஸி என்ற பெயரில் வாடகைக்குவிட்டால் மின் கட்டணம் தொடங்கி, வீட்டுவரி, தொழில்வரி என அனைத்தும் உயரக்கூடும் என்பதை உணர்ந்த மக்கள் அதை தவிர்க்கவே நாள் வாடகைக்கு வீடுகளை விடுகின்றனர். எனவே வெளிமாநில பக்தர்களின் தேவையை கவனத்தில் கொண்டு தாங்கும் விடுதிகளை அறநிலையத்துறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post வெளி மாநில மக்களால் நிரம்பும் திருவண்ணாமலை நகரம்: மாத வாடகை வீடுகளை நாள் வாடகைக்கு விட்டு வசூல் appeared first on Dinakaran.

Related Stories: