தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது: சரத் பவார் குற்றச்சாட்டு

புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பெருமளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். சட்டப்பேரவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல் செய்ய வேண்டுமெனவும் கோரி, 93 வயது சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், புலேவாடாவில் 3 நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சரத் பவார் அவரை சென்று பார்த்தார்.

பின்னர் சரத்பவார் அளித்த பேட்டியில், ‘‘வாக்கு இயந்திரத்தில் முறைகேடாக வாக்குகள் சேர்க்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னிடம் ஆதாரம் இல்லை. மகாராஷ்டிரா தேர்தலில் முன்னெப்போதும் நடக்காத அளவுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகமும் நடந்துள்ளது. வாக்கு இயந்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என நாடு முழுவதும் பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது’’ என்றார்.

* காங்கிரசை அழைத்த தேர்தல் ஆணையம்
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் செயல்முறையில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்க நேரில் விசாரணை நடத்த வலியுறுத்தியது.

இதற்கு நேற்று பதிலளித்த தேர்தல் ஆணையம் நாளை மறுதினம் ஆலோசனை நடத்த காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் பின்பற்றப்பட்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளும் வெளிப்படையானவை என்றும், காங்கிரசின் அனைத்து நியாயமான கவலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறி உள்ளது.

The post தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது: சரத் பவார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: