புதுடெல்லி: இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு சார்பில், தமிழ் அறிஞர்கள், கட்டடக்கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவை சார்ந்த 14 முக்கிய நூல்கள் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 14 தமிழ் நூல்களையும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதில்,‘‘தமிழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல்: ராமேஸ்வரம், நடுகல், அரிக்கமேடு.ஆன்மீகம் மற்றும் இலக்கியம்: ராமானுஜர், பக்தி இலக்கியம், தமிழக நாட்டுப்புற தெய்வங்கள். கலை மற்றும் இசை: பழந்தமிழரின் இசைக்கருவிகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில். அறிவியல் மற்றும் வேளாண்மை: புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை. வாழ்க்கை வரலாறு: மணிமேகலை மற்றும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பங்கிம் சந்திர சட்டர்ஜி (இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு ). ஆகியவை அடங்கும்.
விழாவில் துணை ஜனாதிபதி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தியாவை பொறுத்தவரை ஒரு போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை என்று தொடர்ந்து சொல்வார்கள். ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை ஒரே ஆட்சி அதிகாரம் கொண்ட நாடாக மாற்றினார்கள் என கூறுவார்கள். அதிலும் தமிழ்நாட்டில் இதை அதிகமாக சொல்வார்கள். அப்படி என்றால் தமிழ்நாடு கூட ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள நாடாக இருந்தது கிடையாது. சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகளாக தொடர்ந்து பிரிந்து இருந்தது. ஏன் கொங்கு நாடு கூட 24 நாடுகளாக பிரிந்து இருந்தது. ஆனால் கலாச்சார ரீதியாக நாம் பல ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்திருக்கிறோம். ஜாதியை எதிர்ப்பது இப்போது தான் என நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் தமிழிலிருந்து ஜாதியை எதிர்த்து இருக்கிறார். இப்போது படிப்பவர்களை விட பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் பார்ப்பவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள்.
இருப்பினும் படிப்புத் திறன் அதிகரிக்க வேண்டும். அதாவது இளைஞர்கள் ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க வேண்டும். இந்தியா தர்மத்தினால் தான் ஒன்றாக இணைந்திருக்கிறது. இந்தியா ஒரே நாடாக இருந்தமைக்கு ராமேஸ்வரம் தான் சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியையும் பண்பாடு கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறார். திருவள்ளுவருக்கு கலாச்சாரம் மையம் அமைப்பது போன்ற பல்வேறு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். மலேசியா அமெரிக்கா என எங்கு சென்றாலும் கலாச்சாரம் மையங்களை அவர் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். உபி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை யின் கீழ் 300க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
