திருவக்கரை கல்குவாரி கொத்தனார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

*கொலையுண்டவரின் தலை, கால்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு

வானூர் : திருவக்கரை கல்குவாரி கொத்தனார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் ராஜதுரை (32) என்பவர் கொலை செய்யப்பட்டு வானூர் தாலுகா திருவக்கரை கல்குவாரியில் உள்ள குட்டையில் சடலமாக கிடந்தார். இவ்வழக்கில் கொலையாளிகளை பிடிக்க விழுப்புரம் மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இவ்வழக்கில் கடந்த 27ம் தேதி 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கூவாகத்தைச் சேர்ந்த மாரிமுத்து (32), புவனகிரி ராஜசேகர் (29), விருத்தாசலம் கமாருதீன் (24) நெய்வேலி ராஜகுமார் (28) ஆகிய நால்வரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்தர்குமார் குப்தா தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜதுரை உடல் கைப்பற்றப்பட்ட நிலையில் அவருடைய தலை மற்றும் கை கால்கள் இதுவரை கிடைக்காததால் உடலை எடுத்த குவாரியில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியை தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீரை அதிகப்படியாக வெளியேற்ற முடியாத நிலை உள்ளதால் தலை மற்றும் கை கால்களை தேடி எடுக்கும் பணியில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

The post திருவக்கரை கல்குவாரி கொத்தனார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: