மகிளா காங். நிர்வாகி கணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம்: புதுச்சேரி மகிளா காங்கிரஸ் நிர்வாகி கணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி பூமியான் பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்(எ) கொட்டா ரமேஷ்(54). இவரது மனைவி ரத்னா புதுச்சேரி யூனியன் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தார். ரமேஷ் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில், வட்டிக்கு பணம் விடுதல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ரமேஷுக்கு பல எதிரிகள் இருந்ததால், அவர், தனது பாதுகாப்புக்கு பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி அஸ்வின் என்பவரை, வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ரமேஷ், சின்னகோட்டகுப்பம் அருகே சென்ற போது புதுச்சேரியைச் சேர்ந்த மதன்(22), பத்மநாபன்(28), கராத்தேமணி(24), முகிலன்(26), ஹரிகரன்(24), மணிகண்டன்(26) உள்ளிட்ட சிலர் ரமேஷை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து ரமேஷின் மனைவி ரத்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மதன், பத்மநாபன், கராத்தே மணி, மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது மதன், முகிலன் ஆகியோர் இறந்துவிட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பத்மநாபன், கராத்தேமணி, ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post மகிளா காங். நிர்வாகி கணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: