போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா வான் படை தலைவர் பலி

ஜெருசலேம்: போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா வான்படை தலைவர் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீது கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரில் ஈடுபட்டது. இதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது.

இதற்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் அடுத்தடுத்து ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதன்பின்பு, ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது. இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள செய்தியில், ஹிஸ்புல்லா வான் படையின் தலைவர் மற்றும் துணை தளபதியான ஜாபர் அலி சமஹா பெய்ரூட் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா வான் படை நிறுவப்பட்டது. இந்த படைப்பிரிவுக்கு பல ஆண்டுகளாக ஆளில்லா விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவை ஈரானிடம் இருந்து வந்துள்ளது என்றும் அந்த பிரிவில் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், இந்த ஆயுதங்கள் லெபனானில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளன என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

The post போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா வான் படை தலைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: