கொழும்பு: வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இலங்கையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இலங்கையை நெருங்கியதால் அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிழக்கு மாகாணம், அம்பாரை மாவட்டத்தில் காரைத்தீவு அருகே நேற்றுமுன்தினம் வெள்ளத்தில் டிராக்டர் அடித்து செல்லப்பட்டது. அதில் பயணித்த 11 மாணவர்கள் உட்பட 13 பேர் மாயமாகினர். இதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன டிரைவர், அவரது உதவியாளர் மற்றும் 6 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மத்திய மாகாணத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 8 பேர் படுகாயமடைந்தனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழையினால் நேற்று மதியம் வரை 3,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இலங்கையில் கொட்டித் தீர்த்த கன மழை: வெள்ளத்தில் டிராக்டர் அடித்து செல்லப்பட்டதில் 6 மாணவர்கள் உட்பட 8 பேர் மாயம் appeared first on Dinakaran.