தற்போது இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற பெயரில் பதிவிறக்கம் செய்து பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த முன்முயற்சியானது, பொது சேவை அணுகலை மேம்படுத்துவதையும், பொதுமக்களின் குறைகளை சரியான நேரத்தில் நிவர்த்தி செய்து உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தாம்பரம் குடியிருப்பாளர்களுக்கு, குடிமைப் பிரச்னைகள் குறித்து புகாரளிக்கவும், நகரத்தின் முன்னேற்றத்திற்கு தீவிரமாக பங்களிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
வாய்ஸ் ஆப் தாம்பரம் செயலியில் பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், பொதுசேவைகள் தொடர்புடைய புகார்களை பதிவு செய்யலாம். இந்த செயலி அனைத்து வயதினரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவையை உறுதி செய்கிறது. பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் இடையே நேரடி தொடர்பினை ஏற்படுத்தி பொது சேவையை எளிதாக்குகிறது. பணியின் உண்மை நிலவரம் குறித்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கிறது. மேலும், குறை தீர்க்கும் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்கும், திறமையான சேவை வழங்கலை உறுதி செய்யவும், மேம்படுத்துவதற்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் பல்வேறு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் உபயோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை சிறப்பாக விளக்குவதற்கு உதவும் வகையில், படங்களைப் பதிவேற்றுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பேரிடர் அவசர காலங்களில் மாநகராட்சி அலுவலர்களுக்கு உதவிடும் வகையில், பொதுமக்கள் தங்கள் விருப்பங்களின் அடிப்படையில் தன்னார்வலர்களாகவும் பதிவு செய்யலாம். தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலியின் மூலம் பதிவு செய்யப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குறைகளை களைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post சுகாதாரம், பொதுசேவை குறித்து புகார் அளிக்க கூகுள் பிளே ஸ்டோரிலும் ‘வாய்ஸ் ஆப் தாம்பரம் செயலி’: தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.