மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
அந்த வகையில், காவல்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 2599 நபர்களும், (ஆண்கள் – 1819 மற்றும் பெண்கள் – 780), சிறைத்துறை காவலர் பணியிடத்திற்கு 86 நபர்களும், (ஆண்கள்-83 மற்றும் பெண்கள்-3), தீயணைப்பாளர் பணியிடத்திற்கு 674 நபர்களும், என மொத்தம் 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மீதமுள்ள 2359 நபர்களும், அவர்கள் சார்ந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு, மாவட்டங்கள், சரகங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு 2.12.2024-லிருந்து திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு 4.12.2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 3359 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்! appeared first on Dinakaran.