புதுடெல்லி: நாட்டில் சிறிய குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் சிறையில் இருக்கையில்,அதானியை ஏன் கைது செய்யவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே அளித்த பேட்டியில்,‘‘ சிறையில் அடைக்கப்பட வேண்டிய அதானியை ஒன்றிய அரசு பாதுகாக்கிறது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தது. சிறு சிறு குற்றச்சாட்டுகளுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல ஆயிரம் கோடி முறைகேடு புகாரில் சிக்கிய அதானி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா, அதானி நிச்சயம் மறுக்கத்தான் செய்வார். அவரை கைது செய்ய வேண்டும் . இவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.சாமானிய மக்கள் மீது பாயும் சட்டம் அதானி மீது பாயாதா?. அதானியை பாதுகாத்துவரும் செபி தலைவர் மாதபி புரி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்” என்றார்.
லஞ்சம் கொடுக்கவில்லை: அதானி குழுமம் விளக்கம்
அதானி குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி அளித்த பேட்டியில், ‘‘ கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை.இந்திய அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது?, யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது? என்பதும் அந்த அறிக்கையில் இல்லை’’ என்றார். மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி கூறுகையில், ‘‘அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டில், இந்தியாவில் கொடுக்கப்பட்ட லஞ்சம் குறித்து குறிப்பிடவில்லை. லஞ்சம் கொடுக்க சதி நடந்ததாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டம் மீறப்படவில்லை’’ என்றார்.
The post சிறு குற்றத்துக்காக ஏராளமானோர் சிறையில் அடைப்பு; அதானியை கைது செய்யாதது ஏன்?.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.