அப்போது அவர் கூறியதாவது: நான் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது எனக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபலமாக வேண்டும் என்பதற்காக நான் முதல்வராகவில்லை. மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காகவே முதல்வராகப் பணியாற்றினேன். நான் முதல்வரான பிறகு, 3வது இடத்தில் இருந்த மகாராஷ்டிராவை 6 மாதத்தில் முதலிடத்துக்கு கொண்டு வந்தோம். நான் எப்போதும் ஒரு தொண்டன் தான். இந்த தேர்தலில் பா.ஜ கூட்டணியின் சாமானிய தொண்டனாகவே நான் பணியாற்றினேன்.
ஒரு போதும் முதல்வராகக் என்னைக் கருதியதில்லை. முதல்வர் என்பவர் முதல்வரல்ல… சாமானிய மனிதன். நான் ஒருபோதும் ஏமாற்றம் அடையவில்லை. நாங்கள் போராடினோமே தவிர… ஒருபோதும் புலம்பவில்லை. பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நேற்று (நேற்று முன்தினம்) போன் செய்தேன். முதல்வராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்று தெரிவித்தேன். யார் முதல்வராக வேண்டும் என்ற விஷயத்தில் முடிவெடுப்பதற்கு நான் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. யார் மீதும் யாரும் கோபப்படவில்லை. நாங்கள் ஒன்றுபட்டு தான் செயல்படுகிறோம்.
டெல்லியில் அமித்ஷாவுடன் கூட்டம் நடக்கிறது. அதில், முதல்வர் யார், துணை முதல்வர்கள் யார் என்பது உட்பட அமைச்சரவை தொடர்பாக உரிய முடிவுகள் எடுக்கப்படும். புதிய அரசு அமைப்பது குறித்த அனைத்தும் இன்று இறுதி செய்யப்படும். இவ்வாறு ஷிண்டே கூறினார். பட்நவிசை முதல்வராக்க வேண்டும் என பாஜ மேலிடம் கருதுவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஷிண்டேயின் இந்த பேட்டி, பட்நவிஸ் முதல்வராக வழிவகுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல், பட்நவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவிப்பதாகவும், இருப்பினும் இந்த முடிவை பாஜ தலைமைக்கே விட்டு விடுவதாகவும் ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.
* புதிய முதல்வர் பட்நவிஸ்?
முதல்வர் பதவி தேர்வை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே கூறிவிட்டதால், தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்? மோடி முடிவுக்கு கட்டுப்படுவேன்: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு appeared first on Dinakaran.