மணிக்கு 280 கி.மீ வேகம் செல்லும் புதிய ரயில்கள் சென்னையில் தயாரிப்பு
சென்னையிலுள்ள ஐசிஎப் பிஇஎம்எல் உடன் இணைந்து அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த ரயில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே இப்போது அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து தயாரிப்பதை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு பெட்டி தயாரிக்க ரூ28 கோடி செலவாகிறது. ஏனெனில் அதிவேக ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஒரு சிக்கலான மற்றும் தொழில்நுட்பம் மிகுந்த செயல்முறையாகும். வடிவமைப்பை இறுதி செய்த பின்னரே அதைப்பற்றி அறிய முடியும். இந்த ரயில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும்’ என்றார்.
58,929 வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு
மக்களவையில் பாஜ எம்பி பசவராஜ் பொம்மை கேள்விக்கு ஒன்றிய சிறுபான்மை துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலமாக அளித்த பதிலில், “வக்பு சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமைச்சகம் மற்றும் வக்பு கவுன்சிலுக்கு அவ்வப்போது புகார்கள் வருகின்றது. உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாநில வக்பு வாரியங்கள், அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. வக்பு சொத்து மேலாண்மை அமைப்பின் விவரங்களின்படி, 58,929 வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மட்டும் 869 சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
994 வெடிகுண்டு மிரட்டல்
இந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி வரை 994 வெடிகுண்டு மிரட்டல்களை விமான நிறுவனங்கள் பெற்றுள்ளன. அத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாள வலுவான நெறிமுறைகள் உள்ளன. இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
18 ஓடிடி தளங்கள் முடக்கம்
சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஓடிடி காரணமாக கட்டுப்பாடற்ற நிலை உள்ளது. இதை தடுக்க புதிய சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ரயில் பயணிகள் பயன்படுத்தும் போர்வைகள் மாதம் ஒரு முறை துவைக்கப்படும் என தெரிவித்தார்.
7.62 லட்சம் கிலோ போதைப் பொருள் அழிப்பு
2023ம் ஆண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் 7,62,015 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. 2019ல் 1,55,929 கிலோ அழிக்கப்பட்டன. 2023ல் இது 388 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் தெரிவித்தார்.
6.69 லட்சம் சிம் கார்டு, 1.32 லட்சம் ஐஎம்இஐ முடக்கம்
நாட்டில் சைபர் குற்றங்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் சர்வதேச மொபைல் கருவி அடையாள (ஐஎம்இஐ) எண்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார். மேலும் நிதி மோசடி தொடர்பாக இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார் பெறப்பட்டு, அதில் ரூ3,431 கோடி நிதி மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.