மதுரை, கோவை மெட்ரோ ரயில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு: டிசம்பரில் அனுமதி கிடைக்கும்?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2011ல் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தகுதியான நகரங்களாக, இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களை, ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் தேர்வு செய்தது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெற்றிருந்த ஒரே நகரம் கோவை மட்டுமே. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த கொச்சி, புனே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், சுமார் 13 ஆண்டுகளாகியும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக 2017ல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க இரு டெண்டர்களை விட்டது. இதற்கு தேர்வான சிஸ்ட்ரா என்ற ஆலோசனை நிறுவனம் கடந்த 2019லேயே சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.

அதன்பின், 2021-2022ல் திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கோவையுடன் சேர்த்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் நிதியுதவி கோரப்படும்’’ என்று பதிலளித்தார். கடந்த 2023ல், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சிஸ்ட்ரா நிறுவனம் தயாரித்து, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.

சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்ட 5 வழித்தடங்களில் முதற்கட்டமாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்பின், அரசாணை வெளியிடப்பட்டு, நிலவியல் சர்வேயும் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்ட அறிக்கை, 2023 ஜூலையில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு 2024 பிப்ரவரியில் ஒப்புதலும் தரப்பட்டது. பின்பு ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி கோரி அனுப்பப்பட்டது.

கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை, 655 பக்கங்களிலும், மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை 936 பக்கங்களிலும் அமைந்திருந்தது. மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2024 மே மாதத்துக்கு முன் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த இந்த அறிக்கையை, சில நாட்களிலேயே ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

அதாவது, 2017 மெட்ரோ ரயில் திட்ட கொள்கையின்படி, மெட்ரோ திட்டத்துடன் லைட் மெட்ரோ போன்ற மாற்று திட்டம், பொது போக்குவரத்து திட்டங்களுக்கான பிற விவரங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை அனுப்புமாறு கூறி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ரூ.63,246 கோடி மதிப்பிலான சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடந்த மாதத்தில் ஒப்புதல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 26ம் தேதி, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் தொடர்பாக, சென்னையில் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லாலிடம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க கேட்டுக்கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கடந்த ஜூலையிலேயே கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான தேவைகள் குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) அதிகாரிகள் கோவைக்கு வந்து கள ஆய்வு செய்தனர்.

‘‘ஏற்கனவே 10 ஆண்டுகள் தாமதமாகிவிட்ட நிலையில், இனியும் தாமதிப்பது கோவையின் வளர்ச்சிக்கு பெரும் தடைகல்லாகிவிடும். எனவே விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்று கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. எனவே கோவையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த திட்டம் குறித்து ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய முழுமையான அறிக்கை தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறுகையில், ‘‘எல்லா அறிக்கைகளும் தயாராகிவிட்டன.

முழுமையான அறிக்கை, இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை. ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார். மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான சுமார் 32 கி.மீ தூரத்திற்கு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ரூ.8,500 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு ரூ.11,368 கோடியாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் சமர்ப்பிக்கப்பட்டது இந்த திட்ட அறிக்கை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன் திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், கடந்த ஜூலை 3ம் தேதி மதுரையிலும், ஜூலை 4ம் தேதி கோவையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிகள், மெட்ரோ வழித்தடங்கள், பயணிகளின் தேவைக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர் ரேகா, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் போக்குவரத்து மூத்த நிபுணர் வெங்யுகு உள்ளிட்டோர், ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், மதுரை ரயில் நிலையம், நான்கு மாசி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மெட்ரோ வழித்தட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மண் பரிசோதனை, வழித்தடம், ரயில் நிலையம் அமையும் பகுதி என ஆய்வுப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளன.

மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை, ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகரமைப்பு துறை மற்றும் பொருளாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இவர்களது ஒப்புதலுக்கு பிறகு பொது முதலீட்டு வாரியத்தின் சார்பில் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறைப்படியான அனைத்து நிலைகளையும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் கடந்துவிட்ட நிலையில், இறுதியாக ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ஒன்றிய அமைச்சரவையின் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

* மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடம் விவரம்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிமீ தூரத்திற்கு அமைகிறது. திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர் நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரையில் 10 மீ ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் முதல் ஒத்தக்கடை வரையில் மீண்டும் உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடமும் அமையவுள்ளது. இதில், 5 கிமீ சுரங்கப்பாதையிலும், 27 கிமீ தூரம் உயர்நிலை பால வழித்தடமாகவும் அமைகிறது. 27 ரயில் நிலையங்களில் 3 சுரங்கப் பாதையில் அமைகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம், உக்கடம் முதல் நீலாம்பூர் வரை 20.4 கி.மீ, கோவை சந்திப்பு முதல் வலியம்பாளயைம் வரை 14.4 கி.மீ என 2வழித்தடத்தில் 34.8 கி.மீ. தூரம், 32 ஸ்டேஷன்களுடன் அமைகிறது. திட்டப்பணிக்கான காலம்: 3 முதல் மூன்றரை ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை, கோவை மெட்ரோ ரயில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு: டிசம்பரில் அனுமதி கிடைக்கும்? appeared first on Dinakaran.

Related Stories: