புயல் எதிரொலி; ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்களின் வீடுகளில் புகுந்த கடல் நீர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. இலங்கை பகுதியில் உருவாகி உள்ள உயர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகமாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் நேற்று ஆரம்பித்த மழையானது தற்போது வரை பெய்து வருகிறது.

மழையின் அளவு ராமேஸ்வரம்,மண்டபம், பாம்பன் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் நேற்றிலிருந்து பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது பாம்பன் பகுதியில் மணிக்கு 50லிருந்து 60கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. தொடர்மழை மற்றும் காற்றின் காரணமாக பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கடல் அலையானது 10 அடியிலிருந்து 15 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாம்பன் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள தெற்குவாடி கிராமத்தில் கடல் நீர் புகுந்து வருகிறது. தெற்குவாடி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்த சூழலில் தொடர்மழை மற்றும் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பின் காரணமாக கடல்நீர் ஊருக்குள் புகுந்தது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமடைந்துள்ள நிலையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வருகின்றனர். பாம்பன் பாலத்தில் பனிமூட்டம் போல் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

The post புயல் எதிரொலி; ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்களின் வீடுகளில் புகுந்த கடல் நீர் appeared first on Dinakaran.

Related Stories: