சென்னை: சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகள் கடந்த மாதம் பராமரிப்பு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த கால்வாய்களில் இதுவரை 2,600 டன் அளவிற்கு வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினையும், அங்கு மிதவை அமைப்பின் மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் காரணமாக மழைநீர் தடையின்றி, வேகமாக வெளியேறி வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணா தெருவில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மிதவை அமைப்பின் மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
பின்னர், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்காக, கூவம் ஆற்றிற்கு செல்லும் இணைப்புக் கால்வாயின் முகப்பு பகுதியை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் விரைந்து நடந்து வருவதையும், இணைப்பு கால்வாயின் முடியும் பகுதி அமைந்துள்ள அமைந்தகரை காவல் நிலையத்திற்கு அருகே கூவம் ஆற்றினையும், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட அம்பேத்கர் பாலத்தின் கீழ் ஓட்டேரி நல்லா கால்வாயில் மிதவை அமைப்பின் மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தார். அப்போது எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் அலுவலர்கள் இரவு, பகலாக மேற்கொண்டு பொதுமக்களுக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், துணை ஆணையர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன்குமார், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்ற துணை முதல்வர் அறிவுரை appeared first on Dinakaran.