ஆனால், நீதிமன்ற உத்தரவின் படி நிலங்களை மீட்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகநாத் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, அறநிலைய துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலைய துறை தரப்பில் திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், திருப்போரூர் கந்தசாமி கோயில் சொந்தமான அறக்கட்டளைக்கு கோவளம், நெமிலி, சாளுவன்குப்பம், கிருஷ்ணன் கருணை உள்ளிட்ட இடங்களில் 18.76 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில், ஆக்கிரமிப்பில் உள்ள 11.67 ஏக்கர் நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 184 பேரை வெளியேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மீனவர்கள், இறால் பண்ணை வைத்திருந்தவர்கள், தனி நபர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
புதுகல்பாக்கம் பகுதியில் கோயில் நிலத்தில் இருந்த சிறுவர் பூங்கா, கிணறுகள், நீர் மேலாண்மை செய்யக்கூடிய அமைப்புகள் அனைத்தும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் 10.44 கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் எழுப்பி, இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது.
கோயில் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பை தர்கா ஆக்கிரமித்துள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறநிலைய துறை தொடர்ந்த வழக்கு தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் 123 ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை பதிவு செய்த நீதிபதிகள், பதிலளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
The post திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 123 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: ஐகோர்ட்டில் அறநிலைய துறை தகவல் appeared first on Dinakaran.