* புதிய முதல்வர் தேர்வில் இழுபறி நீடிப்பு, முக்கிய துறைகளை தருவதாக பாஜ சமரசம்
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆகியும், முதல்வர் யார் என முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால் முதல்வர் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜ அதிகபட்சமாக 132 இடங்களை பிடித்தது. சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் ஜேஎஸ்எஸ்2,ஆர்எஸ்பிஎஸ்1, ஆர்எஸ்விஏ1, ஆர்ஒய்எஸ்பி 1 இடத்தில் வெற்றி பெற்றன. இருப்பினும் முதல்வராக யார் இருப்பது என்ற முடிவு எட்டப்படவில்லை.
ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிக இடங்களை பாஜதான் கைப்பற்றியது என்பதால், பாஜவுக்குத்தான் முதல்வர் பதவி கிடைப்பது நியாயம் என பாஜ மேலிடம் கருதுகிறது. இதனால்தான் பட்நவிசை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது. அதற்காக முக்கிய துறைகள் தருவதாக பா.ஜ சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முதல்வர் ஷிண்டே பிடிவாதத்தை விடுவதாக இல்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டப்பேரவை பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கான கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார். அப்போது துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்நவிஸ், அஜித்பவார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக அவர் செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார். 2019 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகும் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் 11 நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நடந்தது. பின்னர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததால் பட்நவிஸ் முதல்வரானார். 5 நாளிலேயே அஜித்பவார் ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு கவிழ்ந்தது. தற்போது அதே போன்ற இழுபறி நிலை மகாராஷ்டிரா அரசியலில் நீடிக்கிறது.
The post சட்டப்பேரவை பதவிக்காலம் முடிந்ததால் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா appeared first on Dinakaran.