தீபத்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், வேலூர் சரக டிஐஜி ஜெயராணி, எஸ்பிக்கள் திருவண்ணாமலை சுதாகர், திருப்பத்தூர் ஸ்ரேயா குப்தா, ராணிப்பேட்டை கிரண் சுருதி மற்றும் ஏடிஎஸ்பிக்கள், டிஸ்பிக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில், தீபத்திருவிழாவுக்கு கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 14ம் தேதி மற்றும் 15ம் தேதி பவுர்ணமி அமைந்துள்ளது.
எனவே, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ஆண்டு 25 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கார் மற்றும் வேன்கள் நிறுத்துவதற்காக 120 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பறக்கும் படை என்ற அடிப்படையில், கிரிவலப்பாதையில் 14 பறக்கும் படைகளும், மாடவீதியில் 4 பறக்கும் படைகளும் பணியில் ஈடுபடும். ஏற்கனவே 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக 250 சிசிடிவி கேமராக்கள் உட்பட மொத்தம் 700 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக 700 கண்காணிப்பு கேமரா 120 இடத்தில் கார் பார்க்கிங்: குற்றங்களை தடுக்க 18 பறக்கும் படைகள், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேட்டி appeared first on Dinakaran.