நெல்லை, குமரி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரை அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன் பயங்கர மோதல்

* செல்லூர் ராஜூ – சரவணன் ஆதரவாளர்கள் அடிதடி, மேடையிலிருந்து கீழே தள்ளி சரமாரி தாக்குதல், மகளிர் அணி முன்னாள் நிர்வாகி பல் உடைப்பு

மதுரை: நெல்லை, குமரி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையில் நேற்று நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில், செல்லூர் ராஜூ, மாஜி எம்எல்ஏ டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவரின் சட்டை கிழிந்ததுடன், மகளிர் அணி முன்னாள் நிர்வாகியின் பல் உடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை நகர் அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு தொகுதிகள் அடங்கிய மதுரை நகர் மாவட்டத்திற்கான கள ஆய்வுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நேற்று நடந்தது.

மதுரை நகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் சரவணன், அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் வட்ட, பகுதி செயலாளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து விசாரித்தனர்.

மேடையில் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்களான கவுன்சிலர் மாயத்தேவன், பொருளாளர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட முன்னாள் நிர்வாகி பைக்காரா இளஞ்செழியன் மற்றும் பீபீ குளம் ராமச்சந்திரன், வைகை பாலன், முனிச்சாலை சரவணன் உள்ளிட்டோர் மேடையேறி, ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்திருக்கிறது. மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவின் செயல்பாடுகளில் அதிருப்தி இருக்கிறது. பகுதிக்கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும். எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பு ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதன் உச்சமாக செல்லூர் ராஜூ தரப்பினர் கடுங்கோபத்துடன் மேடையிலிருந்து இளஞ்செழியன் உள்ளிட்டோரை கீழே தள்ளி, சரமாரியாக தாக்கி மாறி, மாறி அடித்தனர். இந்த தாக்குதலில் இளஞ்செழியனுக்கு முதுகிலும், தோள் பட்டையிலும் குத்தும், அடியும் சரமாரியாக விழுந்தன. ராமச்சந்திரனின் சட்டை கிழிந்தது.

மேலும் மேடையிலிருந்து கீழே தள்ளியபோது, பலரும் கீழே விழுந்தனர். இதில் அதிமுக மகளிர் அணி முன்னாள் இணைச் செயலாளர் இந்திராணியின் பல் உடைந்தது. இந்த அடிதடி மோதலால் கள ஆய்வுக்கூட்டம் நடந்த மண்டபப் பகுதியே போர்க்களமானது. தாக்குதலுக்கு ஆளானோர் அதிமுக மருத்துவரணி நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சரவணனின் ஆதரவாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது. மதுரை அதிமுகவில் ஏற்கனவே கோஷ்டிமோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில், நேற்றைய கூட்டத்தில் இருதரப்பு கோஷ்டி மோதலால் மதுரை நகர் அதிமுக கள ஆய்வுக் கூட்டமே கைகலப்பு கூட்டமாக மாறியது.

செல்லூர் ராஜூ உட்காருங்கப்பா, உட்காருங்கப்பா என்று மைக்கைப்பிடித்து சத்தம்போட்டார். நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் கோஷங்கள் எழுப்பியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ‘‘என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை’’ என மேடையில் நத்தம் விஸ்வநாதன் பேசியதுடன், சம்பவத்தை கேள்விப்பட்டு அரங்கத்திற்குள் வந்த போலீசாரிடம், ‘‘இது கட்சி விவகாரம். போலீஸ் இதில் தலையிட வேண்டாம்’’ எனத்தெரிவித்து திருப்பி அனுப்பினார்.

நெல்லையில் கடந்த 22ம் தேதி நடந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட செயலாளர் கணேசன் தரப்பினர் அடிதடியில் இறங்கினர். இதேபோல, அதே நாளில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடந்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.காமராஜ் மற்றும் முன்னாள் அரசு கொறாடா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி எழுந்து, மேடையில் தலைவர்கள் மட்டுமே பேசக்கூடாது, நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது நிர்வாகிகள் பலர் மேடையில் ஏற முயன்றனர். அவர்களை மேடையில் இருந்தவர்கள் தடுத்து கீழே தள்ளியதால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல கன்னியாகுமரியிலும் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. இப்படி நெல்லை, கும்பகோணம், கன்னியாகுமரியை தொடர்ந்து மதுரை களஆய்விலும் அதிமுகவின் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது கட்சி நிர்வாகிகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

* மாஜி அமைச்சர் பேச்சு தொண்டர்கள் அதிருப்தி
கள ஆய்வுக்கூட்டத்தில் கோஷ்டி மோதலுக்கு பிறகு பேசிய மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ‘‘தலைமைக்கு யாரும் ஆலோசனை கூறவேண்டாம். தலைமை எடுக்கும் முடிவை மட்டுமே செயல்படுத்த வேண்டும். தொண்டர்களால் அதிமுக தலைமை தேர்வு செய்யப்பட்டு, உரிய விதிகளின்படி உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் எந்த ஆலோசனை, குறைகளையும் நிர்வாகிகளிடம் கூறக் கூடாது’’ என்றார். இந்த பேச்சு, அதிமுக தொண்டர்களை அதிருப்திக்கு ஆளாக்கியது.

* திருப்பரங்குன்றத்திலும் தள்ளுமுள்ளு-தாக்குதல்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் நேற்று மதியம் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை முன்னிலை வகித்தனர்.

இதில் மதுரை கிழக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் வட்ட, பகுதி செயலாளர்கள், நகர், பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலூர் ஒன்றிய நிர்வாகி பொன்.ராஜேந்திரன் தலைமையில் வந்திருந்த நிர்வாகிகள் ஆய்வு குழுவினரை சந்தித்து பணி குறித்த விபர நோட்டை காட்டி புகைப்படம் எடுக்க முயன்றனர்.

அப்போது மதுரை மாநகர் எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் ஓரமாகச் செல்லும்படி கூறினார். இதில் இருதரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. மாஜி அமைச்சர்கள் முன்னிலையில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். மோதல் வலுத்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு மாஜி அமைச்சர்கள் கிளம்பிச் சென்றனர்.

The post நெல்லை, குமரி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரை அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன் பயங்கர மோதல் appeared first on Dinakaran.

Related Stories: