பாணாவரம் : பாணாவரம் அரசு பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த மாதம் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. 2ம் கட்டமாக கடந்த வாரமும், இந்த வாரமும் முகாம் தொடர்ந்து நடைபெறுகிறது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் சென்ற வாரம் சனி, ஞாயிறு மற்றும் நேற்றுமுன்தினம், நேற்றும் நடந்தது. இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல்,நீக்கல், திருத்தம் உள்ளிட்ட படிவங்களை பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர்.
இந்நிலையில், பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை நேற்று கலெக்டர் சந்திரகலா திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்தவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இத்திருத்த முகாமே கடைசி வாய்ப்பு என்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ராஜராஜன், பிடிஓக்கள் ரகமத்பாஷா, பாபு, தாசில்தார் செல்வி, ஆர்ஐ வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 18-வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் பெயர் திருத்தம் உள்ளிட்டோருக்கு உரிய படிவம் வழங்கி பூர்த்தி செய்தனர். அப்போது, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞர்கள் அணி சிவகுமார், பிஎல்ஏ-2, பொறுப்பாளர்கள் சரவணன், கதிர்வேல், அங்கன்வாடி ஊழியர் நிர்மலா, கிராம நிர்வாக உதவியாளர் ஜெயபூரணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
The post பாணாவரம் அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் appeared first on Dinakaran.