ஆழியார் அணையில் படகு சவாரி மீண்டும் துவங்கப்படுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை மழை மிகவும் குறைவால், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. மே மாதத்தில் ஓரளவு கோடை மழை பெய்திருந்தாலும் அந்நேரத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடியாக மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும், அந்நேரத்தில் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும், படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

கோடை மழைக்கு பிறகு, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலும், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரையிலும் என சுமார் இரண்டு மாதத்திற்கு மேலாக அடிக்கடி பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. பல நாட்களில் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த மாதம் இறுதியில், நீர்மட்டம் முழு அடியையும் எட்டியது. இதற்கிடையே, ஆழியார் அணையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் துவக்கம் வரையிலும் மழை குறைவாக இருந்தாலும், தொடர்ந்து படகு சவாரி ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆழியார் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி இல்லாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலை தற்போதும் நீடித்துள்ளது. இந்த மாதத்தில் அவ்வப்போது மழை இருந்தாலும், வெயிலின் தாக்கம் இல்லாததால் இயற்கை சீதோஷ்ண நிலைய அனுபவிக்க ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதிலும், விடுமுறை நாட்களில் ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானது.

ஆனால், ஆழியார் அணையில் தொடர்ந்து படகு சவாரி ரத்தால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, ஆழியார் அணைக்கு மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கவும், இயற்கை சூழலை கண்டு ரசிக்கவும், ஆழியார் அணையில் புதிய படகு ஏற்படுத்தி மீண்டும் தகுந்த பாதுகாப்புடன் படகு சவாரிக்கான சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆழியார் அணையில் படகு சவாரி மீண்டும் துவங்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: