தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த தரைப்பாலம் மூழ்கி விடும். இதனால், போக்குவரத்து முற்றிலுமாக தடைபடும். மேலும், தாமரைப்பாக்கத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் 25கிமீ சுற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிக்கு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை இருந்தது.

இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, அணைக்கட்டு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக, பெரியபாளையத்தில் இருந்து ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் கனரக வாகனங்களும் இந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும், தாமரைப்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.

இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது இந்த பாலத்தின் அருகில் கைவிடப்பட்ட மணல் குவாரியில் இருந்து அதிக அளவு பாரத்துடன் மணல் எடுத்துச்சென்ற லாரிகளால் தற்போது இந்த மேம்பாலத்தின் நடுவில் பெரிய அளவில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில், இப்பள்ளம் பெரிதாகி மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் விபத்தில் சிக்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பள்ளம் விழுந்த இம்மேம்பாலத்தின் வழியாக அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் பாலம் வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: