வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக வாடல் நோய், கூன்வண்டு தாக்குதல் உள்ளிட்டவைகளால் அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம் உள்ளது. ஆகையால் தென்னை விவசாய பரப்பை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் இயற்கையிலே தண்ணீர் அதிகம் உள்ளது.
இதனால் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சிங்கராஜபுரம், வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு, மூலகடை உள்ளிட்ட ஊர்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் தென்னை விவசாயம் அதிகளவில் காணப்பட்டது.
ஆனால் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினால் தென்னந்தோப்புகள் சில இடங்களில், பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயத்தில், கேரளாவில் இருந்து பரவிய வாடல்நோய், கூன்வண்டு தாக்குதல் மற்றும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் போனதாலும் தென்னை விவசாயம் பாதிக்குமேல் குறைந்துவிட்டது.
மேலும் கேரளாவில் இருந்து பரவிய வாடல் நோயை விரட்டி விட கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் அதிகளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் தென்னை விவசாயத்தில் வாடல் மற்றும் நோய் தாக்குதல் காரணங்களால் வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவதற்கு செய்யப்பட்ட திட்டங்களால் எந்த பலனும் ஏற்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தென்னை விவசாயம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் குறைந்து வருகிறது.
இந்த விவசாயத்தை அழித்து வாழை, இலவமரம், எலுமிச்சை, கொட்டை முந்திரி, உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் அதிக அளவில் தென்னை விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்ட தேவையான திட்டங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தென்னையை நட்டு வளர்த்தால் அதிகமான மகசூல் பல ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
ஆனால் நட்ட மரங்கள் பட்டுப் போனதால் அதனை வெட்டி எடுக்கும் நிலை தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் வேறு விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே தென்னை விவசாயத்திற்கு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தென்னை விவசாயத்தை காக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து தென்னை விவசாய மாவட்ட சங்க நிர்வாகிகள் கூறுகையில், தென்னை மரங்களுக்கு மானிய அடிப்படையில் உரம் மருந்து பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கினால்தான் தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
The post கடமலை மயிலையில் அழிவின் விளம்பில் தென்னை விவசாயம் appeared first on Dinakaran.