பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், திருச்சி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு எடை மூலம் விற்பனையாகிறது.
கடந்த சில வாரமாக வெளி மாவட்டங்களில் அவ்வப்போது மழையால் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த மாதத்தில் கடந்த வாரம் முதல் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் கோயில் விஷேச நாட்கள் என அடுத்தடுத்து இருந்ததால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு போனது.
அதுபோல் நேற்று வெளி மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வாழைத்தார் வரத்து குறைவாக இருந்துள்ளது. இந்த வாரத்திலும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருப்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கே நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.
இதில் செவ்வாழைத்தார் ரூ.68 வரையிலும், பூவந்தார் ரூ.45க்கும், சாம்ராணி ரூ.38க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.46க்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வெளியூர்களிலிருந்து வாழைத்தார் வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை appeared first on Dinakaran.