கேதார கவுரி விரதம்

கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும் அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் விருங்கி முனிவர் பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இது பற்றி பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டதற்கு… அவர் விருங்கி முனிவர். மோட்சம் அடைய வேண்டும் என்பதால் தான் தன்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார் என்று கூறியுள்ளார்.

இறைவனின் வார்த்தையில் திருப்தி இல்லாத தேவி விருங்கி முனிவரிடம் உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக் கொடு என்றார். விருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.

இதனால் கோபம் கொண்ட பார்வதி கயிலாயத்தை விட்டு பூமிக்கு வந்தாள். அவர் எழுந்தருளிய நந்தவனம் 12 ஆண்டுகளாக மழையின்றி வறண்டு காணப்பட்டது. அவர் வந்ததும் புத்துயிர் பெற்றது. அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அப்ேபாது பார்வதி தேவி முனிவரிடம் ஈசனுடன் மீண்டும் சேர விரதங்களையும் விட மேலான விரதம் உள்ளதா என்று கேட்டார். அதற்கு வால்மீகி முனிவர், கேதாரீஸ்வரர் நோன்பினை அனுஷ்டித்தால் நினைத்தது நடக்கும் என்றார். அதன்படி அம்பிகை விரதமிருந்தார். 21-ம் நாள் தேவ கணங்கள் சூழ சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால் இது கேதார கவுரி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விரதம் 21 நாட்கள் அனுசரிக்க வேண்டியது. தினமும் காலை எழுந்து குளித்து, சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் 21 நூல் கொண்டு 21 முடிச்சுக்களால் கலசத்தினை சுற்றி அமைக்கப்படும் கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது. தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியமாக படைக்க வேண்டும். 21ம் நாள் 21 எண்ணிக்கையில் அதிரசம், வாழைப்பழம், மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபட வேண்டும்.

அன்று 21 காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர். இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து, அருகம்புல் சூட்டி, மஞ்சள்-குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் பதினாறு நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பிறகு பெரியவர்கள் மூலம் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இதனால் சுபிக்‌ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

The post கேதார கவுரி விரதம் appeared first on Dinakaran.

Related Stories: