சென்னை: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தனது 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் இலக்கை எட்டுவதற்கான புதிய முயற்சியாக தமிழ்நாட்டில் இரண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளது. போர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் ஆற்றல் கொள்முதல் மற்றும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது புதுப்பிக்கவல்ல ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், 2025ம் ஆண்டுக்குள் தனது உற்பத்தி செயல்பாடுகளில் 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் பயன்பாட்டை உறுதிப்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தங்களில் ஹூண்டாய் நிறுவனம், முதன்மை தயாரிப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன் மற்றும் போர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் வணிக மேலாண்மை தேசிய தலைவர் கரன் சத்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் முதன்மை தயாரிப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் பயணத்தின் ஒரு மைல்கல்லாக தமிழ்நாட்டில் இந்த மின் உற்பத்தி ஆலைகளை நிறுவ ரூ.38 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் 26 சதவீத பங்குகளையும், போர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் 74 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் 25 ஆண்டுகள் புதுப்பிக்கதக்க ஆற்றல் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.38 கோடியில் இரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகள் : முதன்மை தயாரிப்பு அதிகாரி தகவல் appeared first on Dinakaran.