காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம்

மனித விரோத போர் குற்றத்துக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போரில் பாலஸ்தீன மக்களின் உயிரிழப்பு தொடர்பாக இஸ்ரேல் சமர்ப்பித்த விளக்கங்களும் நிராகரிப்பு

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் காசா பகுதியில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் யெஹ்யா சின்வார், முகமது தயிப் மற்றும் இஸ்மாயில் ஹானியே ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், நெதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர், காசா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தடை செய்து, போர் குற்றம் இழைத்ததற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்ட மேல்முறையிட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது.

The post காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: