கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்பதும், இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் வழக்கமாகியுள்ளது. இதுகுறித்து சின்ன ஒபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தடுப்புச் சுவர்களையும் அகற்றக் கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பலமுறை இமெயில் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்பேரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சின்ன ஒபுளாபுரம் கிராமத்தையொட்டி அமைந்துள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதன் முன்பகுதி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதை கண்ட அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுற்றுச்சுவரை அகற்றினர். அப்போது அந்த இடத்தில் ஒரு கட்டிடம் மற்றும் கோயில் உள்ளதால் கால அவகாசம் வழங்கக் கோரி எழுத்துப்பூர்வமாக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு மீட்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆக்கிரமிப்பின் மதிப்பு ரூ.5 கோடியாகும். மேலும் அதே பகுதியில் உள்ள பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு இடம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: