திருவண்ணாமலை, நவ.19: வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(59). கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர், கடந்த 30.9.2019 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை மிரட்டி, வீட்டுக்கு அருகே உள்ள மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு துடித்துள்ளார். எனவே, மருத்துவமனைக்கு சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச்சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதித்திருப்பது தெரியவந்தது. பின்னர், நடந்த சம்பவம் குறித்து சிறுமி கண்ணீருடன் தெரிவித்ததால், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, வந்தவாசி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ₹5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெருமாளை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த appeared first on Dinakaran.