தொடர்ந்து பரவலான மழை: சாத்தனூர் அணைக்கு 370 கனஅடி நீர்வரத்து

திருவண்ணாமலை, நவ.17: திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை நீடிக்கிறது. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 370 கன அடி நீர்வரத்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது. விட்டு விட்டு லேசான மழை பெய்தது. அதன்படி, திருவண்ணாமலையில் 1 மிமீ, செங்கம் 6.2 மிமீ, போளூர் 1.8 மிமீ, ஜமுனாமரத்தூர் 1.2 மிமீ, தண்டராம்பட்டு 2.4, செய்யாறு 2 மிமீ, கீழ்பென்னாத்தூர் 1.6 மிமீ, வெம்பாக்கம் 12 மிமீ, சேத்துப்பட்டு 9.2 மிமீ மழை பதிவானது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 600 ஏரிகளில் 84 ஏரிகள முழுமையாக நிரம்பியுள்ளன. 22 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 69 ஏரிகள் 75 சதவீதமும், 144 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியிருக்கிறது. மேலும், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடிக்கிறது. அதன்படி, வினாடிக்கு 370 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 116.80 அடியாகவும், கொள்ளளவு மொத்தமுள்ள 7321 மி.கனஅடியில் 6831 மி.கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 60 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 54.45 அடியாகவும், கொள்ளளவு 584 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 41 கன அடி நீர் வரத்து உள்ளது. மிருகண்டா அணையின் நீர்மட்டம் 18.20 அடியாகவும், கொள்ளளவு 61.61 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.54 அடியாகவும், கொள்ளளவு 176 மி.கன அடியாகவும் உள்ளது.

The post தொடர்ந்து பரவலான மழை: சாத்தனூர் அணைக்கு 370 கனஅடி நீர்வரத்து appeared first on Dinakaran.

Related Stories: