திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது. அதையொட்டி, 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா இன்று மாலை நடக்கிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு, அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது, பக்தர்கள் தரிசனம் செய்வது மரபு கிடையாது என்பதால், 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ராஜகோபுரம் வழியாக ஒற்றை வழி வரிசை நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் அம்மணி அம்மன் ேகாபுரம் வழியாக ₹50 கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
The post அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.