ராணுவத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவின் பங்கு சிறப்பானது விழிப்புணர்வு பேட்டரி வாகன பேரணியை தொடங்கி வைத்து வேலூர் கலெக்டர் பேச்சு ராணுவத்தின் எம்.இ.ஜி பிரிவின் 244ம் ஆண்டு நிறைவு

வேலூர், நவ.19: இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவின் பங்கு மகத்தானது என்று, அந்த பிரிவினர் மேற்கொண்ட விழிப்புணர்வு பேட்டரி வாகன பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார்.
இந்திய ராணுவத்தின் மதராஸ் இன்ஜினியரிங் பிரிவு தொடங்கி 244வது ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, ராணுவ சேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குறைகளை கேட்டறியவும், மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்தவர்கள் லெப்டினன்ட் விஷால்தாக்கூர் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து பேட்டரி பைக் பேரணியை தொடங்கினர். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக நேற்று மதியம் வேலூருக்கு இக்குழுவினர் வந்தடைந்தனர். இங்கிருந்து இவர்கள் சித்தூர், கோலார் வழியாக பெங்களூரு சென்றடைகின்றனர். நேற்று மாலை இக்குழுவினர் வேலூரில் இருந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா வேலூர் கோட்டை சுற்றுச்சாலை காவலர் நல்வாழ்வு மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி, மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு அதிகாரி லெப்டினன்ட் விஷால் தாக்கூர் குழுவினருக்கு பொன்னாடைகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் பிரிவு தொடங்கப்பட்டு 244 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய ராணுவத்தில் இக்குழுவினர்களுடைய பணி மிகவும் சிறப்புடையது. இக்குழுவினர் போர்க்காலங்களில் போரில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகளின் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் வகையில் சாலைகள் அமைத்தல், பாலம் அமைத்தல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவது, போர்க்களத்தில் வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துவது என பல்வேறு பணிகளையும் முன்னெடுத்து செய்துள்ளனர்.

இக்குழுவினர் நமது மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குறைகளை கேட்டு அறிவதற்காக இங்கு வந்திருப்பது சிறந்த நிகழ்வு. வேலூர் மாவட்டமானது இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் 2வது இடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தேவையான அனைத்து விதமான நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய நலதிட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என்று பேசினார். தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் ஆர்டிஓ பாலசுப்பிரமணியன், முன்னாள் ராணுவத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராணுவத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவின் பங்கு சிறப்பானது விழிப்புணர்வு பேட்டரி வாகன பேரணியை தொடங்கி வைத்து வேலூர் கலெக்டர் பேச்சு ராணுவத்தின் எம்.இ.ஜி பிரிவின் 244ம் ஆண்டு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: