எதிர்மறை விமர்சனங்களால் பெருத்த நஷ்டம் தியேட்டர் வாசலில் பேட்டி எடுக்க யூடியூபர்களை அனுமதிக்கக்கூடாது: திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் வேண்டுகோள்

திருப்பூர்: திரைப்படம் வெளியாகும்போது யூடியூபர்கள் அளிக்கும் எதிர்மறையான விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் திரையரங்க வளாகத்திற்குள் பேட்டி எடுக்க அனுமதிக்கக்கூடாது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை தாண்டி வர வேண்டி உள்ளது. இந்நிலையில் யூடியூபர்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகள் காரணமாக எதிர்மறையான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். இதனால் படத்தின் விநியோகம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு மேல் படம் வெளியாகக்கூடிய நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு காட்சிகள் காலை 4 மணிக்கே வெளியாகிறது.

இதன் காரணமாக மாநில எல்லையில் உள்ள பகுதிகளுக்குச் சென்று திரைப்படங்களை பார்க்கும் யூடியூபர்கள் தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே எதிர்மறையான விமர்சனங்களை இணையதளத்தில் வைரலாக்குகின்றனர். இதன் காரணமாக படத்தை பார்க்க வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என ஒரு படத்தை உருவாக்க உழைக்கின்ற தொழிலாளர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

எனவே நாடு முழுவதும் காலை 9 மணி என ஒரே நேரத்தில் புதிய படங்களை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர்களை வலியுறுத்தி கேட்கிறேன். திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் திரையரங்க வளாகத்தில் யூடியூபர்கள் படத்தின் விமர்சனம் குறித்த பேட்டிகளை எடுக்க அனுமதிக்கக்கூடாது. அதே நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் 8 வாரங்களுக்கு பின் ஓடிடி-யில் திரைப்படங்களை வெளியிட வேண்டும். விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்பு ஒரு படத்தை குறித்த விமர்சனங்களை வெளியிட வேண்டும். அதே நேரத்தில் அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் முன்வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post எதிர்மறை விமர்சனங்களால் பெருத்த நஷ்டம் தியேட்டர் வாசலில் பேட்டி எடுக்க யூடியூபர்களை அனுமதிக்கக்கூடாது: திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: