திருமலை : தெலங்கானாவில் குழந்தை சாவுக்கு காரணம் என நினைத்த வாலிபர் நடுரோட்டில் தாய், மகனை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கும்மடிதாலா மண்டலம் போந்தபள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்ரநகரில் பீகாரை சேர்ந்த நாகராஜ் என்பவரது குடும்பத்தினரும், அருகிலேயே உத்தரபிரதேசதை சேர்ந்த சரோஜாதேவி குடும்பத்தினரும் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி நாகராஜின் 2 வயது மகன் சிவான்ஸ் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான். தன் மகனை சரோஜாதேவியின் மகள் மனநலம் பாதிக்கப்பட்ட நேகா தான் தண்ணீர் தொட்டியில் தள்ளி சாகடித்ததாக நாகராஜ் குடும்பத்தினர் சந்தேகமடைதனர்.
இதுதொடர்பாக நாகராஜ் குடும்பத்தினர் தகராறு செய்ததால், சரோஜாதேவி குடும்பத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு சென்றனர். இந்நிலையில் நாகராஜ் கோபம் தணிந்திருக்கும் என எண்ணிய சரோஜாதேவி குடும்பத்தினர் 3 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சரோஜா தேவி(50) அவரது மகன் அனில்(30) ஆகியோர் பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த நாகராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாய், மகன் இருவரையும் சரமாரி வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடிதுடித்து பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி நரசாப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நரசாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post குழந்தை சாவுக்கு காரணம் என நினைத்து தாய், மகனை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற வாலிபர் appeared first on Dinakaran.