ரூ.60 ஆயிரம் லஞ்சம் சார்பதிவாளர் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூர் ரோட்டை சேர்ந்தவர் வைரவேல். இவர் தனக்கு சொந்தமான 4 இடங்களை விற்பனை செய்துள்ளார். அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக பத்திர எழுத்தாளர் புவனபிரியாவிடம் பத்திரம் எழுத கொடுத்தார். அப்போது, சம்பந்தப்பட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துபாண்டி ரூ.1 லட்சம் பணம் கேட்பதாக பத்திர எழுத்தாளர் புவனபிரியா தெரிவித்துள்ளார். இதற்கு வைரவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி பத்திரத்தை பதிவு செய்தனர். ஆனால் அதனை வைரவேலிடம் வழங்காமல் இழுத்தடித்தனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குபின் ரூ.60 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து வைரவேல், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். அந்த பணத்துடன் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற வைரவேல், சார்பதிவாளர் முத்துபாண்டியிடம் வழங்குவதற்காக பத்திர எழுத்தர் புவனபிரியாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்ஐ ராஜாமுகமது கொண்ட தனிப்படையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக சார்பதிவாளர் முத்துபாண்டி, பத்திர எழுத்தர் புவனபிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.60 ஆயிரம் லஞ்சம் சார்பதிவாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: