ஈரோடு : நகைச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அட்டவணை அனுமன்பள்ளி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி செல்லம்மாள் (54). இவரது தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று எஸ்பி. ஜவகரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூயிருப்பதாவது:
பெருந்துறை சரளை பகுதியை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளரான அமுதவாணன், அவரது மனைவி யுவமணி ஆகியோர் நடத்தும் வேலா சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் நகைச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்தனர். இதில், நகைச்சீட்டில் கால் பவுனுக்கு 50 வாரங்களுக்கு வாரந்தோறும் ரூ.300ம், அதே மாதந்திர சீட்டு என்றால் மாதந்தோறும் 12 மாதங்களுக்கு ரூ.1,250ம் செலுத்த வேண்டும்.
அரை பவுன் சீட்டு என்றால் வாரந்தோறும் ரூ.500ம், மாதந்தோறும் ரூ.2,000மும், ஒரு பவுன் என்றால் வாரந்தோறும் ரூ.1,000மும், மாதந்தோறும் ரூ.4,000மும் செலுத்த வேண்டும். இதில், கால் பவுனுக்கு போனசாக ரூ.1,000மும், அரை பவுனுக்கு ரூ.1,500மும், ஒரு பவுனுக்கு ரூ.3,000மும் பரிசாக நகைக்கு தகுந்தாற்போல் ஸ்வீட் மற்றும் காரம் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இவர்கள் இதற்கு முன் நடத்திய 2 தீபாவளி பலகார சீட்டில் முறையாக அனைவருக்கும் வழங்கிய நம்பிக்கையினால் நடப்பாண்டுக்கான தீபாவளி நகைச்சீட்டில் சேர்ந்து, எங்களது வசதிக்கு ஏற்றாற் போல வாரந்தோறும் ரூ.300, ரூ.500, ரூ.1,000மும், சிலர் மாத சீட்டிலும் அவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினர்.
சீட்டு தொகையை அமுதவாணன், அவரது மனைவி யுவமணி மற்றும் அவரது மகன்கள் குகன், முகில் வாரந்தோறும் வசூலித்து சீட்டில் வரவு வைத்து சென்றனர். வார சீட்டும், மாத சீட்டும் முடிந்த நாங்கள் 51 வாரத்தில் நகை மற்றும் பலகாரம் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் தரவில்லை.
இதையடுத்து அமுதவாணன் வீட்டிற்கும், அவர்கள் நடத்தும் மெடிக்கலுக்கும் சென்று பார்த்தோம். அங்கு இல்லை. செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் 4 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. எங்கள் 20 பேரிடம் இருந்தும், பக்கத்து ஊரான சோளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் நகைச்சீட்டு மற்றும் பலகார சீட்டு நடத்தி சுமார் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.
The post ஈரோட்டில் நகைச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி appeared first on Dinakaran.