₹3 லட்சம் நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது

தவளக்குப்பம், நவ. 14: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுந்தர்- அனிதா தம்பதி. இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். அனிதா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டில் பாகூர் சுந்தரம் நகர் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வள்ளி (43) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அனிதா வேலைக்குச் செல்லும்போது வீட்டு சாவியை வள்ளியிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அனிதா வழக்கமாக அணிந்திருக்கும் நகைகளைத் தவிர மற்ற தங்க நகைகளை அவரது பெட்ரூமில் உள்ள இரும்பு பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தார். இதனிடையே சம்பவத்தன்று அனிதா பீரோவை திறந்து பார்த்தபோது சில நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் வைத்திருந்த 1 கிராம் தங்க டாலர், 4 கிராம் தங்ககாசு, 12 கிராம் தங்கசெயின், 6 கிராம் தங்க பிரேஸ்லெட், 4 கிராம் கல் பதித்த தங்க மோதிரம் மற்றும் 8 கிராம் லட்சுமி படம் பதித்த தங்க காசு என மொத்தம் 36 கிராம் எடையுள்ள சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரிந்தது. இது பற்றி அனிதா கேட்டபோது, வள்ளி சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து அனிதா, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த வள்ளி, பின்னர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். திருடிய நகைகளை பாகூர் மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அடகு கடைகளில் அடமானம் வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து வள்ளியை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் போலீசார் மீட்டு அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

The post ₹3 லட்சம் நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: