குற்றம்சாட்டப்பட்டவர் என்கிற காரணத்துக்காக வீடுகளை இடிப்பது சட்டவிரோதம்: வழிகாட்டு நெறிமுறை வகுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: குற்றவழக்குகளில் குற்றம்சாட்டப் பட்டவர் என்கிற காரணத்துக்காக ஒருவரது வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாஜ ஆட்சி செய்யும் அரியானா, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர்களை பயன்படுத்தி வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களது மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், “குற்றம்சாட்டப்பட்டாலே அவர்களின் வீடுகளை இடிப்பீர்களா?” என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு காட்டத்துடன் கேள்வி எழுப்பியதுடன், நாடு முழுவதும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதித்து கடந்த செப்டம்பர் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் கடந்த அக்டோபர் 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த விவகாரத்தில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடிப்பதை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை தெரிந்து கொள்ளும் விதமாக அதை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். சில மாநிலங்கள் கடந்த ஐந்து வருடங்களாக புல்டோசர்களை கொண்டு கட்டிடங்களை இடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டாலே அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது. ஒருவர் மீது கிரிமினல் புகார் அல்லது குற்றச்சாட்டு எழுந்தாலே அவரது வீட்டை இடிக்க வேண்டும் என ஏதேனும் சட்டவிதிகள் உள்ளதா? அப்படி எதுவும் கிடையாது என்பதை மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஆக்கிரமிப்பு எந்த வகையில் இருந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது. அது கோயில், குருத்வாரா, தர்கா என எந்த வழிபாட்டு இடமாக இருந்தாலும் அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையிலோ, அல்லது நீர்நிலை போன்ற பொதுசொத்துகளை ஆக்கிரமித்து இருப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்து, கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிறப்பித்த இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டிருந்தனர். மேலும் நாடு முழுவதும் புல்டோசர்களை வைத்து வீடுகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பான தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு அந்த கனவு கலைந்து போய் விடக்கூடாது என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் .ஆனால் குற்ற வழக்குகளில் சிக்குகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களது வீடுகளை அதிகாரிகள் அபகரித்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விதான் எங்கள் முன்பு எழுப்பப்பட்டது.
குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டாலோ அல்லது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் எந்தவிதமான சட்டங்களும் பின்பற்றப்படாமல் வெறுமனே அவர்களது வீட்டை இடித்து தள்ள முடியுமா என்பதை பல்வேறு கூறுகளாக நாங்கள் அலசி ஆராய்ந்தோம். இதில் தன்னிச்சையாக அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்து உள்ளோம். குடிமக்கள் சட்டங்களை மீறும்போது அதை நீதிமன்றம் வாயிலாக சரி செய்ய வேண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் இருக்கக்கூடிய சட்டத்தைக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை போய்விடும்.

குறிப்பாக வீட்டை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினால் அந்த நோட்டீசை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிய கால அவகாசத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்காமல் இரவோடு இரவாக வீடுகள் இடிக்கப்பட்டு அந்த வீட்டின் குழந்தைகளும் பெண்களும் சாலையில் தஞ்சமடைவதை ஏற்று கொள்ள முடியாது. அதனால் போதிய, அதாவது குறைந்தது 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் என்பது சாலைகள் மற்றும் நீர் நிலைகள் போன்றவற்றில் சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு பொருந்தாது. காரணம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்காமல் எந்த ஒரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. மேலும் நோட்டீஸ் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு வெளியிலும் ஒட்டப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் முக்கிய செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் நீதித்துறைக்கு மாற்றானதாக அரசு இருக்க முடியாது. அந்த வகையில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவரின் வீடு அல்லது கட்டுமானத்தை அரசு நிர்வாகம் இடிப்பது என்பது அநீதியாகும். குற்றம்சாட்டபட்டதற்காக ஒருவரின் சொத்துகளை இடித்துத் தள்ளுவது என்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். அவ்வாறு தவறாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளே அக்குற்றத்துக்கான பொறுப்பு ஆவர்.

குற்றம்சாட்டப்பட்டவருக்கும் உரிமைகள் மற்றும் சட்ட பாதுகாப்புகள் உள்ளன. அரசும், அதிகாரிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு உள்ளான காரணத்துக்காக ஒருவரது குடியிருப்புகளை இடித்து தள்ளுவது என்பது சட்ட விரோதமானது. குறிப்பாக கட்டிடங்களை இடிக்கும் விவகாரத்தில் நீதித்துறையின் அதிகாரத்தை அரசு நிர்வாகம் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பது சட்ட விதியாகும். மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரே காரணத்துக்காக ஒருவரது கட்டிடத்தை இடிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

மேலும் ஒருவர் ஒரு வீட்டை கட்டுவது என்பது சமூகப் பொருளாதார அடையாளம், அம்சம் என அனைத்தும் அதில் அடங்கும். எனவே அதில் சமரசம் கிடையாது. வீடு என்பது வெறும் ஒரு சொத்து கிடையாது. அது ஒருவரின் பல ஆண்டுகால போராட்டத்தின் அடையாளமாகும்.

வீடு என்பது ஒரு குடும்பத்துக்கு கண்ணியத்தை அளிக்கிறது. எனவே அந்த உரிமை பறிப்பது என்றால் அரசு நிர்வாகம் அல்லது அதிகாரிகள் அதனை சரியான முறையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நியாயப்படுத்த வேண்டும். மேலும் குற்றவியல் நீதித்துறையின் கொள்கையை பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதி என்றே கருதுகிறது. அப்படி இருக்கையில், ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்ட காரணத்துக்காக அவரது வீடு அல்லது கட்டிடம் இடிக்கப்பட்டால், அது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்குமான ஒரு கூட்டுத் தண்டனையாகவே உள்ளது, இதை அரசியல்சாசனத்தின்படி கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

The post குற்றம்சாட்டப்பட்டவர் என்கிற காரணத்துக்காக வீடுகளை இடிப்பது சட்டவிரோதம்: வழிகாட்டு நெறிமுறை வகுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: