கூடலூர் : கூடலூர் அருகே தாமதமாக வருவது குறித்து கேட்டதால் பெண் தலைமை ஆசிரியரை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் சசிகலா. இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் உள்ளவர் அசீமா. இவர் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை என்றும், பள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியில் செல்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளது. இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு கடந்த 8ம் தேதி காலை ஆசிரியர் அசீமா தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. எனவே பள்ளிக்கு தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியர் சசிகலா காரணம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் வாக்குவாதம் செய்த அசீமா சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் சசிகலாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த தலைமை ஆசிரியர் சசிகலாவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் நேற்று முன்தினம் புகார் கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் அசீமா சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களிடம், ‘‘உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆசிரியர் அசீமா கூறுகிறார். பள்ளியில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வெளி ஆட்களை அழைத்து வருகிறார்.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ஊட்டிக்கு மாணவ-மாணவிகளை தான் அழைத்துச்செல்வதாக தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு தான் உடன் செல்லாமல் வெளி நபர்களான இளைஞர்களை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்.இது குறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பது இல்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் பள்ளிக்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தாக்கி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் தன்னிச்சையாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியை அசீமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணையை விரைவில் நடத்தி சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கல்வித்துறை உயரதிகாரிகள் உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு மனு அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கூடலூர் அருகே தாமதமாக வருவது குறித்து கேட்டதால் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் appeared first on Dinakaran.