தங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் சவரன் ரூ.1080 குறைந்தது: தொடர்ந்து விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1080 குறைந்தது. தொடர் விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து, தினம், தினம் வரலாற்று உச்சத்தை கண்டது. இதையடுத்து கடந்த 31ம் தேதி தீபாவளியன்று ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது.

கடந்த 7ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600க்கு விற்கப்பட்டது. தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த மக்களுக்கு, இந்த விலை குறைவு ஆறுதலை அளித்து இருந்தது. 8ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனையானது. 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்க்கப்பட்டது. 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமை விலையே அன்றைய தினம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்து இருந்தது. இருந்த போதிலும் நகை வாங்குவோரை மேலும் மகிழ்ச்சியடைய செய்யும் வகையில் தங்கம் விலை நேற்று மேலும் அதிரடி சரிவை சந்தித்தது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.7,085க்கும், சவரனுக்கு ரூ.1080 குறைந்து ஒரு சவரன் ரூ.56,680க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. அதே நேரத்தில் தீபாவளி முதல் நேற்று வரை 12 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் சவரன் ரூ.1080 குறைந்தது: தொடர்ந்து விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: