மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது; தொடர்ந்து எகிறும் தங்கம் விலை: வெள்ளியும் வரலாறு காணாத உச்சம்

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து ஒரு பவுன் மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை கண்டு வருகிறது. தங்கம் விலை ஆண்டு இறுதியான இந்த மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையிலும், வரலாறு காணாத வகையிலும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை கடந்த 15ம் தேதி பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை இமாலய உச்சத்தை பதிவு செய்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 16ம் தேதி தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 800க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,200க்கும் விற்றது. அதே நேரத்தில் தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்தது.
இதன் ஒரு பகுதியாக வெள்ளி விலை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, ஒரே நாளில் வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.222க்கும், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் விற்றது. இதன் மூலம் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,520க்கு விற்பனையானது. இதேபோல, வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.224க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்து வருவது நகை பிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது.

Related Stories: